June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ – பதிவு கட்டாயம் தமிழ்நாடு அரசு

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ – பதிவு கட்டாயம் தமிழ்நாடு அரசு

ரெயில், விமான நிலையங்களுக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதும், பயணத்திற்காக செய்யப்பட்ட இ-பதிவு விவரங்கள், பயணச்சீட்டு, அடையாள சான்று ஆகியவை இருந்தால்தான் அனுமதி கிடைக்கும். தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ள நிறுவனங்கள், அவற்றுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனங்களின் பணியாளர்கள் பேருந்து, வேன், டெம்போ. கார் போன்ற 4 சக்கர வாகனங்களில், நிறுவனங்கள் வழங்கும் இ-பதிவுடன் வந்து செல்ல வேண்டும். இந்த 8 மாவட்டங்களில் ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அதன் தொடர்புடைய நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்கி, ஏற்றுமதி தொடர்பான பணிகளையும், சாம்பிள்களை மட்டும் அனுப்பும் பணிகளையும் மேற்கொள்ளலாம். உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம். மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம். விமானம், ரெயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும். கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 14-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி கிடையாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் இதனை கூறி உள்ளார்.