June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

14-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

14-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருந்தது இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது.

ஊரடங்கின் போது மருந்து கடைகள், பால், குடிநீர், செய்தித்தாள் வினியோகத்திற்கு தடையில்லை. பொது வினியோக கடைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு வினியோகம் அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள், உணவு விடுதிகள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் பகல் 3 மணி வரையிலும்; மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து இ-வர்த்தகம் மூலமாக நடக்கும் உணவு வினியோகம் இந்த நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும். மற்ற வகை இ-வர்த்தக சேவைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்படலாம். கோயம்பேடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள காய்கறி, பழங்கள், பூ மொத்த விற்பனை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மொத்த விற்பனை சந்தைகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுமதி கிடையாது.

ரெயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் இயங்கலாம். அங்கு சரக்கு கையாளுதல், குளிர்பதன கிடங்குகள் சேவைகள் பெட்டக முனையங்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. அடிப்படை அத்தியாவசிய உள்கட்டமைப்பு பிரிவுகளான எரிசக்தி, குடிநீர் வழங்கல், துப்புரவு பணி, தொலை தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் இயங்கலாம்.

அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய், காவல், தீயணைப்பு, சிறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், அரசு அச்சகம், உணவு, கூட்டுறவு, உள்ளாட்சி மன்றங்கள், வனம், கருவூலம், சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, இயற்கை பேரிடர் ஆகிய துறைகளின் அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் இயங்கும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம். ஏ.டி.எம். மற்றும் அதுதொடர்பான வங்கி சேவைகளுக்கு அனுமதி உண்டு. ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டோர், மூத்த குடிமக்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பெண்கள், விதவைகள் இல்லங்கள் மற்றும் அதன் தொடர்புடைய பயணங்கள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். கண்காணிப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறுவர்கள் பாதுகாப்பு ஆகிய பணிகளில் உள்ள ஊழியர்கள், அடையாள அட்டை அல்லது இ-பதிவுடன் செல்லலாம். விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய பணிகள், வேளாண் பொருட்களை எடுத்துச் செல்லுதல் ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன.

கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட கால்நடை பண்ணை செயல்பாடுகள், கால்நடை மருத்துவ பணிகளுக்கு அனுமதி உண்டு. கால்நடை மருந்து கடைகள், கால்நடைகளுக்கான உணவு விற்பனை கடைகள் திறந்திருக்கலாம். சரக்கு வாகனங்கள் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சரக்குகளை கொண்டு செல்வது, ஏற்றி இறக்குவது அனுமதிக்கப்படுகிறது.